மின்வாரியம் சில மாதங் களுக்கு முன்பாக மின் விபத்து குறித்து வெளியிட்ட புள்ளி விவரப்பட்டியல், களப்பணி ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மின்சார வாரியத்தில், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் களப்பணி ஊழியர்கள் மிகக்கடினமாகப் பணியாற்றிவரு கிறார்கள். மின்வாரியம் சில மாதங்களுக்கு முன்பு, 2006ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட மின் விபத்துக் களின் பட்டியலை வெளியிட் டது. இந்த காலகட்டத்தில் மின்வாரிய தொழிலாளிகள் 791 பேர் இறந்துள்ளனர். மின்சாரம் தாக்கியதால் 8,915 பொதுமக்களும் இறந்துள்ளனர். 2,618 மின்வாரிய தொழிலாளிகளுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பொது மக்களிலும் 2,651 பேர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய இழப்புகளுக்கும், விபத்துக்களுக்கும் மின்வாரியப் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணமென்று கூறப்படுகிறது.
மின்வாரியத்தில் கள உதவியாளர்கள், கம்பியாளர்கள் பணியிடங்களில், 34,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 64,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் கோரியதற்கு, மின்வாரியம் நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் அதிக வேலைப்பளுவால் கவனமாகப் பணியாற்ற இயலாமல், மன உளைச்சல் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இங்கே மனிதநேயத் தோடான பார்வையே முக்கியம்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு 107வது வாரியக்கூட்டத்தில் 10,260 பணியாளர்களை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டு, இதுநாள்வரை அரசு தரப்பிலிருந்து அனுமதி தரப்படவில்லையாம். ஆட்சிக்கு வருமுன்னர், மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள், தற்போது மவுனம் காக்கிறார்களே என்று தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். எனவே, மின்வாரியப் பணியாளர்களும், பொறியாளர் களும், அதிகாரிகளும் போராட்டக் களத்திற்கு தயாராகி வருகின்றனராம்.
இதுகுறித்து பேசிய மின்சார வாரியத்தின் சி.ஐ.டி.யூ. தலைவர் ஜெயசங்கர், "தற்போது வெளியிடப்பட்ட இறப்புகளின் புள்ளிவிவரங்கள், தொழிலாளர்களின் பற்றாக்குறையையே காட்டுகின்றது. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆனநிலையிலும் பணியாளர் பற்றாக்குறை குறித்து கண்டுகொள்ளவேயில்லை. மின்வாரியத் தில், ஹெல்ப்பர், ஒயர்மேன் ஆகியோர், நான்கைந்து பேர் செய்யவேண்டிய பணியை ஒருவரே செய்யும் நிலை நீடிக்கிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் ஏற்படும் தவறுகளால் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பணிக்கு வந்த எங்களை பலிகொடுப்பது எப்படி நியாயம்? இதற்கெல்லாம் அரசு தரப்பில் பதிலேதும் இல்லை. இவர்கள் காட்டும் கணக்குகூட 2016-லிருந்து 2022 வரை மட்டுமே உள்ளது. 23-24ஆம் ஆண்டிற்கான கணக்கைப் பார்த்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் 500 இருக்கக்கூடும்'' என்றார்.